சென்னை:மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வெளியாகியது. இதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் சென்னையை பொறுத்தவரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் சைதன்யா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் படித்து சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடத்தி மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஆசிரியர்கள் சிறப்பித்தனர்.
இதில் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சைதன்யா தனியார் பள்ளியை சேர்ந்த மோனிகா என்ற மாணவி 494 மதிப்பெண்களும்,சந்தோஷ் என்கிற மாணவன் 491 மதிப்பெண்களும், சர்வேஷ் என்கிற மாணவன் 490 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல் மொத்தம் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 480க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல் 2023-24 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொது தேர்வில் சைதன்யா தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி 496 மதிப்பெண்களும், விபின் தேவேஷ்,கார்த்திக் ஆகிய மூவரும் 495 மதிப்பெண்களும் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். அதேபோல வத்ஸன், இமானுவேல் ஆகியோர் 494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி இயக்குனர் கூறுகையில், "ஸ்ரீ சைதன்யா பள்ளியின் சாதனைக்கு கடின உழைப்பும் மாணவ மாணவிகளின் முழு அர்ப்பணிப்பும் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த மாபெரும் சாதனையால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிபிஎஸ்இ பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
மேலும் இதுகுறித்து மாணவ மாணவிகள் கூறுகையில், “பள்ளியில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் பாடங்கள் நடத்தி தொடர்ந்து தேர்வுகளையும் வைத்து பயிற்சிகள் கொடுத்தனர். அதன் பயனாக நாங்கள் அனைவரும் தேர்வு அறையில் எந்தவொரு பதற்றமும் பயமும் இன்றி தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளோம். இத்தருணம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்கு.. நேதாஜி பேரவை அளித்த புகார் என்ன? - Case On Savuku Sankar