திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலையப் பணியாளர் தேர்வு, விதிகளுக்கு புறம்பாக நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு, இந்திய அணுசக்தி துறை செயலாளர் மற்றும் இந்திய அணுமின் உற்பத்தி கழகத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், "வருகிற 3ஆம் தேதி நடைபெற இருக்கும் சி -பிரிவு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான பணியாளர்கள் தேர்வு சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி, இந்திய அணுசக்தித் துறை செயலாளரைச் சந்தித்து, கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தப்படியே, சி -பிரிவுக்கான பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று நேரில் சென்று கோரிக்கை மனு அளித்து விவரித்தேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், அதன்படி அவர்கள் தனக்கு உறுதிமொழி அளித்ததாகவும், ஆனால் அதையும் மீறி தற்போது சி- பிரிவு பணியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது என கடிதத்தில் கூறியுள்ளார்.