சென்னை:சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான பெண்களுக்கான சீனியர் ஸ்னூக்கர் (Snooker) விளையாட்டு போட்டியானது கடந்த ஜூலை 2 ஆம் தேதி தொடங்கி, 5 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டது.
இதில், இறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனை மஞ்சியா என்பவரை வீழ்த்தி தமிழ்நாடு, சென்னை மந்தவெளியைச் சேர்ந்த அனுபமா ராமசந்திரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கம் வென்று தாயகம் திரும்பிய அனுபமாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
ஆசிய நாடுகளுக்கு இடையேயான பெண்கள் சீனியர் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டிக்காக இந்தியாவிலிருந்து ஐந்து வீரர்கள் பங்கேற்ற நிலையில், முதல் பரிசான தங்கப் பதக்கத்தை சென்னையைச் சேர்ந்த அனுபமா என்பவரும், வெண்கலப் பதக்கத்தை பெங்களூருவைச் சேர்ந்த கீர்த்தனா என்பவரும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆசிய நாடுகளுக்கு இடையேயான பெண்கள் சீனியர் ஸ்னூக்கர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்றது பெரும் மகிழ்ச்சி. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், பயிற்சியாளர்கள், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. சீனியர் பிரிவில் விளையாடியதாகவும், முதல் போட்டியிலேயே தங்கப் பதக்கம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று மேலும் முயற்சி எடுத்து பதக்கங்கள் வெல்வேன்" என்றார் அனுபமா.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 14 விமானம் ரத்து - flights cancelled today