தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை லைட் ஹவுஸ் ரேடாரின் பணி என்ன.? வெளிச்சம் எவ்வளவு தூரம் செல்லும்? திகைக்க வைக்கும் தகவல்! - CHENNAI LIGHT HOUSE FACT

சென்னை கலங்கரை விளக்கத்தில் பழுதடைந்த ரேடாரின் ஆண்டனா சரி செய்யப்பட்டு கிரேன் உதவியுடன் மீண்டும் பொருத்தப்பட்டது. கலங்கரை விளக்கின் வெளிச்சம் 70 கி.மீ தொலைவில் உள்ள கப்பல்களுக்கு வழிகாட்டும்.

சென்னை லைட் ஹவுஸ்
சென்னை லைட் ஹவுஸ் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2024, 5:07 PM IST

Updated : Dec 21, 2024, 7:11 PM IST

சென்னை:மெரினா கடற்கரை சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கி வருகிறது. அந்த மெரினா கடற்கரைக்கு கூடுதல் அழகு சேர்ப்பது கலங்கரை விளக்கம் என்றால் மிகையகாது. கடந்த 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய கலங்கரை விளக்கம் கட்டிடம் 11 மாடிகள் கொண்டவை. மொத்தம் 150 அடியை கொண்ட இந்த கோபுரம் துறைமுக கட்டுப்பாட்டு கட்டிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் சக்தி வாய்ந்த ரேடார் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் சென்னைக்கு வந்து செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரேடார் கருவி ஸ்கேன் செய்யும் பணிகளையும், கேமரா புகைப்படம் எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

ரேடாரின் பணிகள்

இதற்காக கலங்கரை விளக்கத்தின் 11வது மாடியில் ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கதிர்வீச்சு தாக்கம் காரணமாக 10-வது மாடி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு கடலின் காட்சியை ரசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ரேடார், கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரேடாரின் ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பி வைப்பார்கள்.

இதையும் படிங்க:நான் முதல்வன்: 'புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தையே தொடங்கும் நம்பிக்கை வந்துவிட்டது' - மாணவிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில், சக்திவாய்ந்த ரேடார் கருவியின் ஆண்டனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதானது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ரேடாரை பரிசோதித்து பார்த்தனர். ஆனாலும், அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் படகுகள் மற்றும் கப்பல்கள் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ரேடார் கருவியின் ஆண்டனா சரி செய்யப்பட்டு, ராட்சத கிரேன் எந்திரம் மூலம் ரேடார் கருவியில் ஆண்டனா பொருத்தப்பட்டது.

இதுகுறித்து ஈடிவி பாரத் செய்தியாளருக்கு தகவல் அளித்த கலங்கரை விளக்கத்தின் அதிகாரி, கடந்த ஒரு சில நாட்களாக கலங்கரை விளக்கத்தின் மீதுள்ள ரேடார் கருவியின் ஆண்டனா பழுதாகி இருந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு ரேடார் கருவி பொருத்தப்பட்டு கப்பல்களை கண்காணித்து வந்தது. ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு இதேபோல் சிறிய பழுது சரிசெய்யப்பட்டு ரேடார் கருவி இயங்கி வந்தது.

இந்நிலையில், ஒரு சில நாட்களாக ரேடார் ஆண்டனா பழுதாகியது. இதையடுத்து 1,500 கிலோ எடைகொண்ட ரேடார் கருவியின் ஆன்டனா சரி செய்யப்பட்டு ராட்சத கிரேன் மூலம் இன்று பொருத்தப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கின் வெளிச்சம் 70 கி.மீ தொலைவில் உள்ள கப்பல்களுக்கு வழிகாட்டும். இந்த ரேடார் கருவி மூலம் கப்பல்களை (ஸ்கேன்) கண்டறிய முடியும். லிப்ட் வசதியுடன் கலங்கரை விளக்கம் உள்ளதால் 10 வது மாடி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த கலங்கரை விளக்கத்தில் உள்ள ரேடார் கருவியின் ஆண்டனா பழுதானதை அடுத்து இன்று ரேடார் கருவியானது மாற்றப்பட்டுள்ளது. ரேடார் கருவியின் ஆண்டனா பழுதை நீக்கி தற்போது பொருத்தப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் இன்று (டிச.21) அனுமதிக்கப்படவில்லை'' என கூறினார்.

Last Updated : Dec 21, 2024, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details