திருநெல்வேலி:நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அளித்த கரைசுத்து புதூரில் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதற்காக ஏற்பாடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்குப் பின்னர், ஜெயக்குமாரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரைசுத்து புதூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உட்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் ஜெயக்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயக்குமார் உயிரிழப்பதற்கு முன்பு அதாவது, கடந்த 30 ஆம் தேதி மரண வாக்குமூலம் என அவர் எழுதியதாக கடிதம் ஒன்றை அவரது மகன் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தார்.
அந்த கடிதத்தில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு உட்பட ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.