சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அந்த தண்டனையை கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. அதனை அடுத்து, முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு விதித்துள்ள தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அதன் பின்னர், ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மே 18ஆம் தேதி ராஜேஷ் தாஸ், அவரின் நண்பர் 4 பேர் உடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக அவரது மனைவி பீலா கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, ராஜேஷ் தாஸின் மனைவி பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதும், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரே பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு.. திடுக்கிடும் தகவல்!