கோயம்புத்தூர்:அன்னூர் அருகே பாஜக நிர்வாகி விஜயகுமார் வீட்டில் ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தில், திருட்டுப்போனது ரூ.18.5 லட்சம் என விசாரணையில் தெரியவந்ததால், பொய் புகார் அளித்ததாக பாஜக நிர்வாகி மீது அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர், இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது வீட்டில் வைத்திருந்த ரூ.1.5 கோடி பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக நேற்று முன்தினம் அன்னூர் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார், மேட்டுப்பாளையம் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், 10 தனிப்படைகள் அமைத்து வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் விஜயகுமாரின் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன். இவர், கருமத்தம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் இருந்து ரூ.18.5 லட்சம் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் அவர் மீது 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.