சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை தீவிரமாகியுள்ளதால் பணிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் எந்த தடையுமில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் இயங்கும்
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது; மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல தாமதமின்றி தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.