தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெரியார் சொன்னதை பொதுவெளியில் பேச முடியாது' - சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு! - ANNAMALAI SUPPORTS SEEMAN

பெரியார் பேசியதையெல்லாம் பொதுவெளியில் பேச முடியாது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், பெரியார் குறித்து சீமான் பேசியதையும் அவர் ஆதரித்துள்ளார்.

அண்ணாமலை பேட்டி, சீமான் (கோப்புப்படம்)
அண்ணாமலை பேட்டி, சீமான் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

Updated : 18 hours ago

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, ''அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் கைதான ஞானசேகரன் விவகாரத்தில் கடந்த 15 நாட்களாக திமுகவின் அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்று தெரியும். ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் இல்லை என்று சொன்னார்கள். ஆனால், தற்போது உண்மையை சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்திலும், தமிழக மக்களை திசை திருப்புவதற்காகவும் ஞானசேகரன் திமுக அனுதாபி என்று முதல்வரே சொல்லிவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் முதல்வர் இறங்கி இருக்கிறார்.

டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். மூத்த அமைச்சரை மதுரைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் எனக் கூறினார்.

சீமானுக்கு ஆதரவு

தொடர்ந்து பெரியார் குறித்து சீமான் பேசியதை ஆதரித்த அண்ணாமலை, பெரியார் பேசியதாக ஆதாரங்களை நான் தருகிறேன் எனவும் அது பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு விரும்பவில்லை எனவும் கூறினார். மேலும் அவர், ''சீமான் சொன்னது சரி என்றும் நான் கூறவில்லை... பெரியார் அவ்வாறு பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பெரியார் பேசிய பல சர்ச்சைகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. பெரியார் பேசியதையெல்லாம் பொதுவெளியில் பேச முடியாது. பெண்கள், குழந்தைகள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். பெரியார் பேசியதை பொதுவெளியில் பேசினால் மக்களுக்கு அருவருப்பாக இருக்கும்.'' என்றார்.

கோவை பீப் பிரியாணி பிரச்சனை

அத்துடன், கோவை உடையாம்பாளையம் பகுதியில் நடந்த பீப் பிரியாணி பிரச்னை குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ''பாஜக நபர் கோயில் அருகில் மாமிச கடை வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறார். முழு வீடியோவை வெளியிடாமல் ஒரு நிமிட காட்சிகளை மட்டுமே வெட்டி வெளியிட்டுள்ளார்கள். பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். மேலும், இந்த விவகாரம் இரு தரப்பு சமுதாய பிரச்சனையாக மாறிவிடக்கூடாது. காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அதனை சட்டப்படி சந்திப்போம். சீமான் அண்ணனுக்கு நான் ஆதரவு தெரிவித்து பெரியார் பேச்சுகள் அடங்கிய புத்தகங்களை நானே தருகிறேன். சீமானை தேடி போலீஸ் வீட்டுக்கு வந்தால் அவர் அதை காண்பிக்கலாம்'' என தெரிவித்தார்.

யுஜிசி சர்ச்சை

யுஜிசி அறிக்கை சர்ச்சை குறித்து அண்ணாமலை கூறுகையில், ''முதலில் யுஜிசி குறித்து முதலமைச்சர் உயர் கல்வி துறை செயலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி வரை கருத்து சொல்ல அவகாசம் இருக்கிறது. மேலும், நெட் பிரச்சனை குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் செனட் உறுப்பினர்கள் மாநில அரசு சார்பில் இருக்கிறார்கள். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

Last Updated : 18 hours ago

ABOUT THE AUTHOR

...view details