கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கண்டித்து நேற்று (ஜூன் 22) பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுக்கவே சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு தடையை மீறி 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், தகவலறிந்து அங்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகளைக் கண்டித்து பாஜக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், மதுரையில் ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுத்து, முன்னேச்சரிகை நடவடிக்கை என்று அவர்களை கைது செய்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக சார்பில் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்" என்று குற்றம்சாட்டினார்.
மதுவுக்கு அடிமையான தமிழகம் - அண்ணாமலை:மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால், 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2 மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதுமட்டும் அல்லாது, 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்துள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.