சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று (பிப்.9) ஆவடியில் தனது யாத்திரையை மேற்கொண்டார். இதில், பாஜகவினர் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “கூட்டணியைப் பொறுத்தவரையில் தலைமையில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என் மண் என் மக்கள் யாத்திரை, கட்சி வளர்ச்சி என களத்தில் இருக்கிறேன். கூட்டணி பேச்சுவார்த்தையில் மாநிலத் தலைவராக தலையிட விரும்பவில்லை.
மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். நாள் ஒன்றுக்கு, இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளிவருகிறது. கூட்டணியைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வேண்டும். அதற்கான வேலையை தொண்டர்கள், தலைவர்கள் செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி வெற்றியா?கருத்துக்கணிப்பு படி, பாஜக தமிழகத்தில் 20 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாக கூறுகிறது. அடுத்த கருத்துக்கணிப்பில், பாஜக 20 சதவிகிதத்தை தாண்டும். பாஜக வாக்கு வங்கி பெரிய அளவில் உயரும். அவை சீட்டுகளாகவும் மாறும். மக்களின் நம்பிக்கையால் பாஜக வளர்கிறது.