சென்னை:ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோயில். இந்தக் கோயிலில் கரூவூல புதையல் அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் மன்னர்கள் தெய்வங்களுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆபரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறை கடைசியாக 1985ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அறையை மீண்டும் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து சாவியை தேடியபோது, அதனை காண முடியவில்லை, தற்போது வரை சாவி மாயமாக இருந்து வகுகிறது. இந்தச் சூழலில் நேற்று தேர்தல் பரப்புரைக்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடி, பூரி ஜெகநாதர் கோயிலில் வழிபாடு நடத்திய பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடையே பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் இந்த கோயில் பாதுகாப்பாக இல்லை. அந்த அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது. அதனை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?” என பேசியுள்ளார். தமிழ்நாடு குறித்து பிரதமர் பேசியுள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மோடி பேசிய இந்த பதிவை தன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போல தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.