சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணங்களை உயர்த்தி, ஒரு நாளைக்கு டெம்போ வேன்களுக்கு ரூ.330, கார்களுக்கு அதிகளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், மல்டி லெவல் அடுக்குமாடி கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வந்த்யுள்ளது. அப்போது, ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதில், வாகனங்களை மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் கொண்டு போய் நிறுத்தி மீண்டும் வெளியே எடுத்துக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக, பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே தொடர்ந்து கடும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் 2 ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று (டிச.04) புதன்கிழமை முதல் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம்:
வாகனம் | பழைய கட்டணம் | உயர்த்திய புதிய கட்டணம் |
கார் | குறைந்தபட்சம் ரூ.80 | ரூ.85 |
அதிகப்பட்சம் ரூ.525 (24 மணி நேரத்திற்கு) | ரூ.550 | |
டெம்போ வேன் | குறைந்தபட்சம் ரூ.315 | ரூ.330 |
அதிகப்பட்சம் ரூ.1050 | ரூ.1100 | |
பஸ், லாரி | குறைந்தபட்சம் ரூ.630 | ரூ.660 |
அதிகப்பட்சம் ரூ.2100 | ரூ.2,205 |
மேலும் இருசக்கர வாகனங்களுக்கு, அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை இருசக்கர வாகனங்களுக்கு ஏற்கனவே பழைய கட்டணம் ரூ.30-ல் இருந்து புதிய கட்டணமாக 35 ரூபாயாகவும், 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95-ல் இருந்து 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெத்தபெட்டமைனை போதை தடுப்பு காவலர்களே சப்ளை செய்த கொடூரம்! சிக்கியது எப்படி?
பயணிகள் அவதி:
ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வாகனங்கள் பிக்கப் பாயிண்ட், கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் இரண்டாவது தளத்திற்கு மாற்றப்பட்டது. இதனால், விமான பயணிகள் கடும் அவதி அடைந்து வந்துள்லனர். இந்த நிலையில், விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் எந்த முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனியார் கார் பார்க்கிங் கட்டண அலுவலர்களிடம் கேட்டபோது, “சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலுக்கு வந்தது. சென்னை விமான நிலைய நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார் பார்க்கிங் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை சிறிதளவில் உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது சிறிதளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.