சென்னை:தமிழகத்தில் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக நேற்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக ஒரே ஆசிரியர்களை பல கல்லூரியில் கணக்கு காண்பித்துள்ளதாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் இணைவு பெற்ற கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரின் விவரங்களை ஆய்வு செய்தோம். ஏற்கனவே ஆசிரியர்களின் ஆதார் எண் பெறப்பட்டு அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. ஆசிரியர்கள் தங்கள் ஆதார் எண்ணை மாற்றி அளித்துள்ளனர். அதனால் ஒரே ஆசிரியர் வேறு கல்லூரியில் பணிபுரிவதாக அளித்த தகவலை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களின் பிறந்த தேதியை வைத்து ஆய்வு செய்த பொழுது, ஒரே பேராசிரியர் 3, 4, 5 என பல கல்லூரிகளில் வேலை பார்ப்பது போல் பெயரை பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. 2023-24ஆம் கல்வியாண்டில் 91 கல்லூரிகளில் பணியாற்றி வந்த 211 பேராசிரியர்கள் பெயர்கள் வேறு கல்லூரியிலும் இருப்பது கண்டறியப்பட்டது.
2024- 25ஆம் ஆண்டுக்குரிய அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்த கல்லூரிகளில் 124 கல்லூரிகளில் அளிக்கப்பட்ட பேராசிரியர் பட்டியலில் ஒரே பெயரைக் கொண்ட 470 பேராசிரியர்கள் வேறு வேறு கல்லூரியில் பணியாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 91 கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு மேல் ஒரே பேராசிரியர் பெயர் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.