சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தது எப்படி என்பது குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும்போலீசார் ஆய்வு செய்தபோது சில கேமராக்கள் வேலை செய்யாதது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் எத்தனை செல்ஃபோன் எண்கள் பதிவாகி இருந்தன என்று சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது ஞானசேகரின் செல்ஃபோன் எண் சம்பவ இடத்தில் பதிவாகியது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டூர்புரம் தனிப்படை போலீசார் ஞானசேகரனை பிடித்து விசாரணை செய்தபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் முன்னுக்குப் பின் முரணான பதிலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஞானசேகரனின் சகோதரர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, தான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும், தன் அண்ணன் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பார எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும் சம்பவதன்று தனது அண்ணன் அணிந்திருந்த உடைகளை போலீசாரிடம் அவர் காண்பித்துள்ளார். அதன் பிறகு அதனை வீடியோ கால் மூலம் போலீசார் மாணவியிடம் காட்டி உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக நுழைவு வாயில் வழியாக ஞானசேகரன் வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரன் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக போலீசார் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீவிர விசாரணை நடத்தியபோது ஞானசேகரன் தான்செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆறு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு ஞானசேகரனின் சகோதரர் கொடுத்த துப்பின் மூலமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இவர் மீது 15 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபடவில்லை என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் ஞானசேகரன் அடர்த்தியான புதர்களுக்கு பின்புறம் மறைந்திருந்து இதுபோன்று செல்ஃபோன் மூலம் வீடியோ எடுத்து மாணவர்களை மிரட்டி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.