சென்னை: மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளது. இதுதான் மருத்துவக் கல்வியை திமுக அரசு வளர்க்கும் அழகு இதுதானா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, சேலம், தேனி உள்ளிட்ட 13 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் (Dean) பணியிடங்கள் அதிகபட்சம் 4 மாதங்களாக காலியாக உள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், மருத்துவக் கல்லூரி முதன்மையர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.
மருத்துவக் கல்வி கட்டமைப்பில் மருத்துவக் கல்லூரிக்கான முதன்மையர் பணியிடம் மிகவும் முக்கியமானது ஆகும். அந்த பணியிடம் ஒரு நாள் கூட காலியாக இருக்கக் கூடாது. ஒரு மருத்துவக் கல்லூரியின் முதன்மையர் எந்த தேதியில் ஓய்வு பெறப் போகிறார் என்பது அந்த பணியில் அவர் நியமிக்கப்பட்ட நாளிலேயே தெரிந்து விடும். அவ்வாறு இருக்கும் போது, முதன்மையர் பணிகளை குறித்த காலத்தில் நிரப்பாமல் வைத்திருப்பதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை.
மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவை இயக்ககம் ஆகியவற்றில் உள்ள அனைத்து நிலை உயர்பதவிகளுக்குமான பதவி உயர்வுக்கான ஏற்பாடுகள் மார்ச் 15ஆம் தேதியை தகுதி காணும் நாளாகக் கொண்டு தொடங்கப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பெரும்பாலான காலங்களில் கடைபிடிக்கப்படுவதில்லை.