சென்னை: பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பாரதிதாசனை, சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் சந்தித்து 69 சதவீத இட ஒதுக்கீடு (சாதிவாரி கணக்கெடுப்பு) மற்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ”தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனைச் சந்தித்தோம். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். பீகாரைப் போன்று தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும்.
கடந்த 2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டிற்கு ஏன் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும், இன்னும் ஒரு ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை கொண்டு வர வேண்டும் என தீர்ப்பு அளித்தது. ஆனால், அரசு இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வந்திருக்கிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் என்றைக்கு வேண்டுமானாலும் எடுக்கலாம். எடுத்தால் தமிழ்நாட்டில் தரவுகள் இருக்கிறதா என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். 69 விழுக்காடு இட ஒதுக்கீடு எதற்கு தொடர வேண்டும் என்பதுதான் அவர்கள் கேள்வியாக இருக்கும்.
முதலமைச்சர் புள்ளியல் சட்டங்கள் (Statistical Acts & Rules) படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இருமுறை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
மத்திய அரசு கணக்கெடுப்பு எடுத்தால் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் தெரியும். மாநில அரசு கணக்கெடுப்பு எடுத்தால் அந்த மக்களின் வாழ்வாதாரம் குறித்து தெரியவரும். எனவே, மாநில அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். எடுக்க மாட்டேன் என்றால் ஸ்டாலின் சமூக நீதி பற்றி பேசக்கூடாது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சமூக நீதி உணர்வு இருந்தது. ஸ்டாலினுக்கு சமூக நீதி உணர்வு இருக்கிறதா? இல்லையா? என தெரியவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது எனக் கூறுவதற்கு என்ன காரணம்? சமூக நீதி மீது நம்பிக்கை இல்லையா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீது நம்பிக்கை இல்லையா?
69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை மீறி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து இருக்கிறார்கள். என்ன தீர்ப்பு வேணாலும் கொடுக்கப்படலாம்.
அவ்வாறு ஒருவேளை உச்ச நீதிமன்றம் இந்த இடஒதுக்கீடை ரத்து செய்தால் அன்றே திமுக ஆட்சி போய்விடும். அவ்வாறு நடந்தால் வரலாற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் வேறு விதமாக எழுதப்படும். முதலமைச்சருடன் இருக்கும் ஐந்து அமைச்சர்கள் முதலமைச்சரை தவறான வழியில் நடத்துகிறார்கள். அவர்களிடம் சமூக நீதி இல்லை, அவர்கள் வியாபாரிகள்.
எல்லா சமுதாயமும் எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்த சமுதாயம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், யார் பின் தங்கி இருக்கிறார்கள்? யார் அதிகமாக அனுபவிக்கிறார்கள், எந்த சமுதாயம் பயன்பட்டு இருக்கிறார்கள், எந்த சமுதாயம் பயன்பெறவில்லை என்பதை தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசை பரிந்துரை செய்வதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணைய தலைவர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சமுதாயங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள முதலமைச்சருக்கு விருப்பம் இல்லையா? அமைச்சர் சேகர் பாபுக்கும், பொன்முடிக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தம் உள்ளதா?
ரூ.48 லட்சம் கோடி பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கிறதா? ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெயர் சொல்ல முடியாது. தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டு ரயில்வே நிதியை விட இந்த ஆண்டு அதிகமாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருந்தால் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம் பெற்றிருக்கும் என சிரித்துக் கொண்டே கூறினார்.
மத்திய அரசு 2026ஆம் ஆண்டு தான் கணக்கெடுப்பு எடுப்பார்கள். அதுவரை காத்திருக்க வேண்டுமா? அதற்குள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டால் என்ன செய்வது? 10.5 சதவீதம் இல்லாமல் 69 விழுக்காடு காப்பாற்ற விரைவில் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாடு ஓரளவுக்கு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் பெரியார் போன்றவர்கள் போராடி பெற்ற சமூக நீதி. அதை திமுக காற்றில் பறக்க விட்டு சமூக நீதி குறித்து வசனம் பேசி வருகிறார்கள்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDITS - ETV BHARAT TAMIL NADU) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு; விஏஓவிடம் விசாரணை! - Minister Anitha Radhakrishnan