தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுகவினர் வேட்டி, சேலை விநியோகம்? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! - Anbumani Ramadoss - ANBUMANI RAMADOSS

Anbumani Ramadoss: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வாக்கிற்காக திமுகவினர் வேட்டி சேலை வைத்திருந்ததாகவும், அதனை பாமகவினர் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss
அன்புமணி ராமதாஸ் (Credits - Anbumani Ramadoss FB page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 3:34 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக - பாமக - நாதக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, மூன்று கட்சிகள் தரப்பிலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளைச் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஏ.சி.இராமலிங்கம் என்பவரின் வீட்டில் வைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளால் வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்கப்பட்டு வந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறிய திமுகவினரின் இந்த சட்டவிரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் விதிகளை சற்றும் மதிக்காமல் திமுகவினர் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை கையூட்டாக வழங்கியதைக் கண்டித்து, பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்து வரவழைத்தனர்.

ராமலிங்கத்தின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி - சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளனர்.

திமுகவின் மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஓட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கொந்தளித்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் மக்களின் கோபத்தை நன்றாக பார்க்க முடிகிறது. இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் திமுக, அரசு எந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயல்கிறது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் துணை போவது கண்டிக்கத்தக்கது.

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும். மத்திய துணை இராணுவப் படையினரை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததற்காக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் கலவரம் நடக்கும்”... அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details