கடலூர்: கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியப் பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தென்னம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள அழகுமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்த தங்கர் பச்சான், வெளியில் வந்த போது அங்கு இருந்த கிளி ஜோசியரிடம் தனக்கு கிளி ஜோசியம் பார்க்கும்படி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கிளி ஜோசியர் ஜோசியம் பார்த்த போது, அவருக்கு வந்த அட்டையில் அந்த கோயிலில் உள்ள அழகுமுத்து அய்யனார் சாமியே வந்ததால், உங்களுக்கு வெற்றி என அந்த கிளி ஜோசியர் கூறியதை தொடர்ந்து, தங்கர் பச்சான் உடன் வந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், பச்சைக் கிளிகளை கூண்டில் அடைத்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதால், வனத்துறையினர் இது குறித்து விசாரித்து வழக்கு பதிந்தனர்.
மேலும், கிளி ஜோசியம் பார்த்தவர்களை இரண்டு நாட்களாக அவர்கள் தேடி வந்த நிலையில், இன்று அழகுமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வராஜ் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு சகோதரர்கள் கிளி ஜோசியம் பார்ப்பதற்காக வந்துள்ளனர். கிளி உடன் வந்திருந்ததை அறிந்த வனத்துறையினர், அங்கு சென்று இருவரையும் பிடித்து வந்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கூண்டுகளில் இருந்த நான்கு கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் தற்போது வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கிளிகளும் பறக்க விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், கிளி ஜோசியம் பார்த்தவர்கள் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த விவகாரத்தில் ஜோசியர் செல்வராஜ் கைது செய்யப்பட்டதற்கும், கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழ்நாடு அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது.
கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குநர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.