தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா; தமிழகத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி எங்கே? - அரசியல் தலைவர்கள் கேள்வி! - kannadigas job reservation

Kannadigas job reservation:கர்நாடகாவில் 100 சதவீதம் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியின் நிலை என்ன என அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டிடிவி தினகரன், மு.க ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ்
டிடிவி தினகரன், மு.க ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 7:50 PM IST

சென்னை:கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவிகிதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 75 சதவிகிதமும், குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் 100 சதவிகிதம் கன்னடர்களுக்கே ஒதுக்குவது தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்த இச்சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இத்தகைய சட்டத்தை கொண்டுவருவாதக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு, அதை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள சட்டம் பிற மாநிலத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட, கர்நாடக மக்களின் வேலை உரிமையை பாதுகாக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

கர்நாடகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கர்நாடகத்தில் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். இதனால், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் இனி பறிக்கப்பட்டுவிடும்.

இந்த நிலையை மாற்றி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழர்கள் நலன்களைக் காப்பதாகக் கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள். இத்தகைய சட்டத்தை இன்று வரை நிறைவேற்றவில்லை.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ”தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளை கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் தமிழகத் தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக சட்டம் இயற்ற முன்வர வேண்டும்" என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "கூட்டணியாக இருந்தாலும் கேள்வி கேட்போம்".. கே.பாலகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன? - TN Electricity Bill Hike Issue

ABOUT THE AUTHOR

...view details