தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“உதயநிதி மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன்” - விஜயின் அரசியல் வருகை குறித்து அன்பில் மகேஷ்! - about actor vijay political entry

Minister anbil mahesh: கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம், கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம் என நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களின் நோக்கமும் தெரியவரும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 3:43 PM IST

அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களின் நோக்கமும் தெரியவரும்

திருச்சி:திருச்சி தேசிய கல்லூரியில் வருகிற 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பன்னாட்டு கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுநர்கள், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்தரங்கை வழங்க உள்ளனர். அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பிக்க உள்ளேன்.

மேலும், தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கமும் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், “நடிகர் விஜயை உதயநிதி ஸ்டாலின் மூலம் எங்களுக்கும் கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும் போதும் அன்பாக பேசக்கூடியவர்தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல, நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம். கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும்போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரிய வரும்” எனக் கூறினார்.

தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, “பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இவருக்கு சீட்டு கொடு, அவருக்கு சீட்டு கொடு, இந்த கூட்டணிக்கு சீட்டு கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம். கருணாநிதி என எண்ணி செயலாற்ற வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்" என பதிலளித்தார்.

சிறந்த ஜல்லிக்கட்டு வீரருக்கு அரசு வேலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதன் பிறகே, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜயின் அரசியல் யாரை எதிர்க்கிறது? யாருடைய ஓட்டுக்கு வேட்டு?

ABOUT THE AUTHOR

...view details