தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பை சுமந்தபடி மகளுக்கு பொங்கல் சீர்...11 ஆண்டுகளாக தொடரும் பாச நிகழ்வு! - PUDUKKOTTAI FATHER PONGAL SEER

புதுக்கோட்டையில் 11 ஆண்டுகளாக தனது மகளுக்கு கரும்புகளை தலையில் வைத்துக் கொண்டு சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் முதியவர் வீடியோ வைரலாகி வருகிறது.

செல்லத்துரை
செல்லத்துரை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 2:20 PM IST

Updated : Jan 15, 2025, 4:35 PM IST

புதுக்கோட்டை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.‌ இதனை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியமும், கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கம் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது வாடிக்கை.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வடக்கு கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (81). இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சுந்தராம்பாளை சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தராம்பாளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், அன்றைய தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 11 ஆண்டு காலமாக மகள் மீது கொண்ட பாசத்தால் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சீர் வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க:2,000 கிலோ காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் நந்தி! பக்தர்கள் தரிசனம்!

குறிப்பாக தனது 81 வயதில் அவரது சைக்கிளில் தேங்காய் பழம், மஞ்சள் கொத்து, வேட்டி துண்டு, பொங்கல் பூ, பச்சரிசி, வெள்ளம் உள்ளிட்ட பொங்கல் சீருடன், ஐந்து கரும்புகளை தலையில் வைத்துக் கொண்டு, கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார்.

வம்பன் நான்கு ரோடு பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியந்து வருவதோடு கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். காலங்கள் கடந்தும் தமிழரின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும், தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளிலேயே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் கொத்தகோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், தந்தை, மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Last Updated : Jan 15, 2025, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details