தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வருசமா இவரு கடையில வடை 1 ரூபாய்தான்.. லாபத்தை எதிர்பார்க்காத 1 ரூபாய் வடை தாத்தா! - 1 Rupee Vada In Chennai

1 Rupee Vada Shop In Chennai: சென்னை அரும்பாக்கம் பகுதியில் 15 வருடங்களாக வெறும் 1 ரூபாய்க்கு வடை விற்பனை செய்யும் 72 வயதான முருகேசன் தாத்தா குறித்து இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1 ரூபாய் வடை தாத்தா முருகேசன்
1 ரூபாய் வடை தாத்தா முருகேசன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 7:18 AM IST

சென்னை: டீ குடிக்கும் போதும், காலை டிபன் சாப்பிடும் போதும் பெரும்பாலும் வடை இல்லாமல் பலரும் சாப்பிடுவதில்லை. அதிலும் கூலித் தொழிலாளிகள் பலருக்கும் தினசரி உணவே இந்த வடைதான். சென்னையை பொறுத்த அளவில் ஒரு வடை ரூ.10-க்கும் அல்லது சிறிய வடையாக இருந்தால் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது.

இப்படி இருக்கையில், சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஜனநாதன் தெருவில் 15 வருடங்களாக வெறும் 1 ரூபாய்க்கு வடையை ஒரு வயதான முதியவர் விற்பனை செய்து வருகிறார் என்றால் சென்னைவாசிகளுக்கு ஆச்சர்யமாகதான் இருக்கும்.

சென்னையில் ஒரு ரூபாய்க்கு வடை விற்கும் முதியவரின் சிறப்பு தொகுப்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

இது குறித்து இந்த கடையின் உரிமையாளர் முருகேசன் தாத்தா, நமது ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டியளிக்கையில், "நான் சிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவர் எவ்வளவோ மக்களுக்கு நல்லது செய்துள்ளார். அவரை போல நானும் மக்களுக்கு என்னால் வகையில் உதவி செய்ய நினைத்துதான் வடையை 1 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறேன்.

இந்த வேலையில் நட்டம் என்பது இருக்காது. ஆனால், பெரிய அளவில் லாபம் கிடைக்காது. பள்ளி குழந்தைகள் என அனைவரும் வடையை வாங்கி மகிழ்ச்சியாக சாப்பிடுகின்றனர். இதுதான் எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது. அந்த திருப்தி போதும்.

நமது கடையில் வடை, போண்டா 1 ரூபாய்க்கும் 4 சமோசா 10 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். வடையும், போண்டாவும், நான் இங்கு கடையில் தயார் செய்கிறேன், சமோசா மட்டும் வெளியிலிருந்து வாங்கி இங்கு பொறித்து விற்பனை செய்கிறேன்.

முதலில் மெயின் ரோடில் தள்ளு வண்டி கடையில் வடை விற்பனை செய்தேன். எனக்கு தற்போது 72 வயது ஆகிறது. வயது அதிகமானதால் என்னால் அங்கு வெகு நேரம் நிற்க முடியவில்லை. எனவே கடையை இந்த பகுதியில் வைத்தேன், யாரிடமும் எந்த பணமும் உதவியும் கேட்டு நின்றதில்லை. எனக்கான வேலையை நானே செய்து கொண்டுவருகிறேன்.

மக்கள் பல பேர் என்னை பாராட்டுகின்றனர். சக வியாபாரிகள், நான் குறைவான விலையில் விற்பனை செய்வதை ஏன் என்று கேட்கின்றனர். இது என்ன மாதிரியான லாபத்தை உனக்கு தரும்? விலையை உயர்த்தி விற்பனை செய்யலாமே? என்று அறிவுரையெல்லாம் வழங்குகின்றனர்.

அடுத்தவர்கள் சாப்பிட்டு அதை பார்த்து மகிழ்வதில் இருக்கும் சந்தோசம் வேறு எதிலும் இல்லை. 15 வருடங்களாக 1 ரூபாய்க்கு விற்கிறேன், தற்போது சமையல் எரிவாயு, எண்ணெய் என அனைத்து பொருட்களின் விலைகளும் ஏறி விட்டது. முன்னே இருந்ததை காட்டிலும் இப்போது மிகவும் குறைவான லாபமே கிடக்கிறது.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 வடைகள் விற்கிறேன், அதிகபட்சமாக 400 ரூபாய் எனக்கு இதில் கிடைக்கும். ஆனால் இதனை வியபாரநோக்கில் பார்த்தால் எனக்கு வருமானமே கிடையாது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:82 வயதில் கருநாகக்கடி.. 107 வயதில் எள்ளுப்பேரன்களுடன் கனகாபிஷேகம் கொண்டாடிய பேச்சியம்மாள் பாட்டி

ABOUT THE AUTHOR

...view details