சென்னை:அமைந்தகரை, ஆசாத் நகர், ராஜகோபால் தெருவில் தமீம் அன்சாரி, என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பிரியாணியை வீட்டில் தயார் செய்து அதே பகுதியில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார். பிரியாணி தயார் செய்த பாத்திரங்களை கழுவும் போது, எதிர் வீட்டின் முன்பு தண்ணீர் நிற்பதாக கூறி, எதிர் வீட்டில் வசித்து வரும் முகமது முக்தார், என்பவர் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தமீம் அன்சாரியின் மனைவி சுலைக்கா பானு, மகன் சாகுல் அமீதுவிடம் எதிர் வீட்டில் வசிக்கும் முகமது முக்தார் வீட்டின் முன்பு தண்ணீர் வந்ததாக கூறி அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார்.
வெளியே சென்ற தமீம் அன்சாரி வீட்டிற்கு வந்து, ஏன் எனது மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்தாய் என தட்டிகேட்ட போது தமீம் அன்சாரிக்கும், முகமது முக்தாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் முகமது முக்தார் ஆத்திரமடைந்துள்ளார்.
அப்போது, வீட்டிலிருந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தமீம் அன்சாரியை கழுத்தில் குத்தி தாக்கி உள்ளார். தாக்குதலில் இரத்த காயமடைந்த தமீம் அன்சாரியை அவரது குடும்பத்தினர் மீட்டு கே.எம்.சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் தமீம் அன்சாரி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தமீம் அன்சாரியின் மகன் சாகுல் அமீது என்பவர் K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். தொடர்ந்து கொலை வழக்கில் முகமது முக்தாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.