தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வேட்பாளருக்கு இருக்கும் நோய்களை பற்றி தெரிவிக்க வற்புறுத்த முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம்! - Candidate Medical Reports

Rules for candidates: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், சட்டத்திருத்தம் தான் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 10:34 PM IST

சென்னை: தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்வதோடு, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர், 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால், அந்த விவரங்களை கேட்க முடியாது என விளக்கமளித்தார்.

மேலும், இது சம்பந்தமாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அது குறித்து சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், இது கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், தான் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது எனவும், மருத்துவக் காப்பீடு பெற மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக்கூடாது என வாதிட்டார்.

இதையடுத்து, வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மேற்கோள் காட்டும் தீர்ப்பு நகல்களை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 361 ரத்து.. மூத்த வழக்கறிஞர் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details