திருப்பத்தூர்: ஆம்பூர் நகைக்கடை பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சிக்காரம். இவரது கடையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், நகையை அடமானம் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆம்பூர் சரகக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, தனிப்படை காவல்துறையினர் ஆம்பூரில் நடத்திய வாகனச் சோதனையில் இரண்டு இளைஞர்கள் பிடிபட்டனர். அப்போது, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆம்பூர் சரகத்திற்கு உட்பட்ட இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், கொள்ளையடித்த நகையை ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள சிக்காரம் நகைக்கடையில் அடகு வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நகையை மீட்பதற்காக சிக்காரம் நகைக்கடையில் விசாரணை மேற்கொண்ட போது, சிக்காரம் ஒத்துழைப்பு அளிக்காமல் மறுத்து வந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொள்வதாகக் கூறி இன்று நகைக்கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விரைந்து வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் ஆம்பூர் நகரக் காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் ஆகியோர் நகைக்கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நகைக் கடை உரிமையாளர் சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கைது செய்தவரை விசாரணை பின்பு விடுவிக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?