சென்னை: ராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக் கல்லூரி 1951 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர் நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும், நடிகர்களாகவும், தொழிலதிபர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில், புது கல்லூரி வளாகத்தில் 'கல்லூரி பயின்றோர் பேரவை' சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது 1976, 1983 ஆண்டு உள்ளிட்ட பல்வேறு காலங்களில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது கல்வி, வாழ்க்கை, தற்போது தங்களது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவற்றை மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.
குறிப்பாக 1983 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றுக்கூடி அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவியும், கைகளை பற்றியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், மாணவர்கள் ஒரு சிலர் ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியாததால் சிறிது நேரம் சிந்தித்து அவர்களை தெரிந்து கொண்டு ஆரத் தழுவி மகிழ்ந்தனர். பின்னர் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். அத்துடன், தாங்கள் படித்த இடங்களில் ஒன்றாக சென்று தங்களுடைய வாழ்க்கை பயணங்கள் குறித்து பேசி மகிழ்ந்தனர்.