கள்ளக்குறிச்சி:மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வை ஒன்றிய அரசு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது - போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் கூட்டணி கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வாசித்தார். அவை வருமாறு:
1. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும்.
2. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்.
3. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.
4. மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்.
5. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்.
6. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.