திருச்சி:இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு, பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானைக் கொண்டாடுவர்.
பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கம், ஏழை மக்களுக்கு தர்மம் வழங்கி கடைபிடிப்பதாக உள்ள பெருநாளான ரமலான் பண்டிகை, இன்று (ஏப்.11) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.