தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஊழலுக்கு வழிவகுக்கும் நான் முதல்வன் திட்டத்தை அரசு கைவிடுக" - AISEC கமிட்டி கோரிக்கை! - chennai AISEC Conference

கல்லூரி பாடங்களை தனியாருக்கு தாரை வார்த்து கல்வியை சீரழிக்கும், ஊழலுக்கு வழிவகுக்கும் நான் முதல்வன் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் அகில இந்திய கல்விப் பாதுகாப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பொதுக் கல்வி பாதுகாப்பு மாநில மாநாடு
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 6:07 PM IST

சென்னை:பொதுக் கல்வி அமைப்பை பாதுகாக்கக் கோரி, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் (AISEC) தமிழ்நாடு மாநில அமைப்பு சார்பில், பொதுக் கல்வி பாதுகாப்பு மாநில மாநாடு சென்னையில் நேற்று (ஜன. 27) நடைபெற்றது.

மக்களின் அடிப்படைக் கல்வி உரிமையை பாதுகாக்கக் கோரி நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ்நாடு மாநிலத் தயாரிப்புகுழு உறுப்பினர் சு. உமா மகேஸ்வரி, முன்னாள் துணைவேந்தர் ஜவகர் நேசன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் யோகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
  • கல்லூரி பாடங்களை தனியாருக்கு தாரை வார்த்து கல்வியை சீரழிக்கும், ஊழலுக்கு வழிவகுக்கும் “நான் முதல்வன்” திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
  • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தொடக்கக் கல்விலிருந்து உயர்கல்வி வரை தாய்மொழியில் போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மொழி கொள்கையை தொடக்கக் கல்வியிலிருந்து உயர்கல்விவரை பின்பற்ற வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வழியாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் வழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
  • தூய்மைப் பணியாளர்களை பள்ளிகளுக்கு நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.
  • பள்ளிகளில் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பு காட்டுவதை நிறுத்த வேண்டும். இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், ஆன்லைன் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பு, எமிஸ் அப்டேட்ஸ், வானவில்மன்ற செயல்பாடுகள், நான் முதல்வன் திட்டச் செயல்பாடுகள் போன்றவற்றை நிறுத்தி பள்ளிக்குள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் சுதந்திரமாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
  • கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்களில் 25% எண்ணிக்கை உள்ளவர்கள் அரசின் நிதியுதவியுடன் படிக்கும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்குசெலவிடும் தொகையை அரசுப் பள்ளிகளுக்கே செலவு செய்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.
  • முப்பருவக் கல்வி முறையை மாற்றி வருடம் முழுவதும் படிக்கும் ஒரே பருவ முறையைக் கொண்டு வர வேண்டும். பள்ளிக்கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளை வருடந்தோறும் பராமரிப்புச் செய்யவும் மற்ற தேவைகளை நிறைவு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆங்கிலவழி வகுப்புகள் மற்றும் தமிழ் வழி வகுப்புகள் இரண்டிலும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்பிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்.
  • ஆங்கில வழிக் கல்வியை தருவதற்கு தனியாக ஆங்கிலவழியில் பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
  • ஓராசிரியர் பள்ளிகளை மாற்றி வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை 1:20 என்ற விகித அடிப்படையில் மாற்ற வேண்டும்.
  • மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் உட்பட பகுதி நேர ஆசிரியர்கள் வரை அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையை தடுத்து ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் கல்வி கட்டணங்கள் நிர்ணயிக்க கல்வியாளர்கள், பெற்றோர்கள் கொண்ட ஜனநாயக குழுவை ஏற்படுத்தவேண்டும்.
  • மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் செல்லும் ஆசிரியர்களின் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக மாற்று ஆசிரியர்களை நியமித்து கற்றல் கற்பித்தலில் தடங்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தேசியக் கல்விக் கொள்கை 2020 வலியுறுத்தும் மாதிரிப் பள்ளிகள் முறையை ஒழித்து அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சமமான கல்வியைத் தர அரசு முன் வர வேண்டும்.
  • அரசு பல்கலைக்கழகங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரந்திர அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அரசு கல்வி நிறுவனங்களுக்குப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.
  • தேசிய கல்விக் கொள்கை 2020ல் ஒன்றிய அரசால் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்த முனையும் கிரெடிட் வங்கி பாடத்திட்டம் (Academic Bank of Credit - ABC) திட்டத்தை கைவிட வேண்டும்.
  • அரசு, அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் அனைத்துக் கட்டுமான வசதிகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கி அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா..! மாலையே மீண்டும் முதலமைச்சர் ஆகிறார்..!

ABOUT THE AUTHOR

...view details