சேலம்: கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் பிப்.27 முதல் 29 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய கட்டுமான சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு குறித்தான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று (பிப்.24) நடைபெற்றது. இந்த கூட்டம் மாநிலத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், "கட்டுமானப் பணிக்கு அத்தியாவசியத் தேவையான கருங்கல் ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு ஏற்புடையது அல்ல. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடு கட்டும் மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது” எனத் தெரிவித்து, இதன் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கட்டுமான சங்கத்தின் மாநிலத் தலைவர் திருசங்கு, "கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும் பிப். 27 முதல் 29ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். வரும் 29ஆம் தேதி சேலத்தில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை கட்டுமானப் பொருட்களான ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் பொருட்கள் விலை கடுமையாக ஏறியுள்ளது. இதனால் சாலை பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.