மதுரை: மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலில் 'தமிழகத்தில் கைம்பெண்கள் பெண்கள் மாண்பு பாதுகாப்பு சட்ட உரிமைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகளைத் தேடி' என்கின்ற ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'கலங்கரை' என்னும் அமைப்பின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம்' சார்பில் நடத்தப்பட்ட மேற்கண்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட களஆய்வின் அடிப்படையில் புத்தக வடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வின் பொறுப்பாளர் ராஜகுமாரி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலான கைம்பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக கலாச்சார நடைமுறைகள் வழக்கத்தின் படியும் மிகவும் பின் தள்ளப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. நிரந்தர வேலையில்லை. கடனாளியாக இருக்கின்றார்கள். கலாச்சார பாகுபாடுகள் அவர்களுடைய மாண்பைக் குறைத்து இன்னும் பின்னுக்குத் தள்ளி உள்ளது.
இச்சூழலில் தமிழக அரசு கைம்பெண்களுக்கென கொண்டு வந்திருக்கின்ற தனி வாரியத்தை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரம் கீழ்க்கண்ட சில பரிந்துரைகளை நாங்கள் முன்வைக்கின்றோம். பெண்களுக்குக் குறிப்பாக விதவைப் பெண்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் தனிச் சட்டம் பெண்களுக்குத் தேவை.
பெண்கள் விதவை நிலைக்கு தள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற மதுபானம், மதுபோதை தடை செய்யப்பட வேண்டும். அரசு மதுவிற்பதை தடை செய்ய வேண்டும். பெண்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்புக்கு குறிப்பாக அரசுத் துறையில் பெண்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு சென்சஸ் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 38.5 லட்சம் விதவைப் பெண்கள் உள்ளனர். குறிப்பாக தற்போது உள்ள மக்கள்தொகையில் 10.7% கைம்பெண்கள் உள்ளார்கள். அவர்களின் கணவர்கள் இறப்பிற்கான காரணம் பல விதங்களில் இருக்கிறது.