சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இது மட்டுமில்லாமல் வெப்ப சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த மூன்று தினங்களாகவே மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது.
இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஹைதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலை வட்டமடித்து பறந்தன. இடி மின்னல் சூறைக்காற்று அவ்வப்போது ஓய்ந்தபோது, அவை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொச்சி, கண்ணூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, இந்தூர் உட்பட 18 விமானங்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு என 35 விமானங்கள் தாமதமானதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர்கள் கூறுகையில், “இடி, மின்னல், சூறைக்காற்று இல்லாமல் எவ்வளவு கனமழை பெய்தாலும் விமான சேவைகளை பாதிக்கப்படாமல் வழக்கம்போல் இயக்க முடியும். ஆனால் நேற்றிரவு முதல் அதிக அளவில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்று இருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு இடி, மின்னல் தான் முக்கிய காரணம். விமான ஓடுபாதையில் தண்ணீர் இல்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சென்னை சென்ட்ரலில் பயணியின் கைப்பையை நைசாக லவட்டி சென்ற நபர்... போலீசில் சிக்கியது எப்படி? - Chennai Central Theft Issue