சென்னை:ரீமால் புயல் காரணமாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னையிலிருந்து அந்தமானுக்கும், அந்தமானிலிருந்து சென்னைக்கும் இயக்கப்பட இருந்த விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:ரத்து செய்யப்பட்ட இரண்டு விமானங்களில் ஒன்று சென்னையில் இருந்து காலை 5.05 மணிக்கு புறப்பட்டு காலை 7.15 மணிக்கு அந்தமான் சேரும். இரண்டாவது விமானம் காலை 7.55 மணிக்கு அந்தமானில் இருந்து புறப்பட்டு, காலை 10.20 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானமாகும்.
அதேபோல், கொல்கத்தாவில் இருந்து அந்தமானுக்குச் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானமும், விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமானுக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அந்தமானில் இருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய இருந்த ஏர் இந்தியா விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவை ரத்து ஏன்?வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம், ரீமால் புயலாக வலுப்பெற்று அந்தமான் மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.