புதுக்கோட்டை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திரைப்பட நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா, நேற்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நீச்சல் தெரியாத ஒருவர் ஓட்டை விழுந்த படகில் பயணம் மேற்கொண்ட கதை போன்று தான் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் தானும் தோற்று, தன்னோடு இருப்பவர்களையும் தோற்கடிப்பவர் தான் வைகோ. அவருடைய மகன் துரை வைகோவிற்கு நீங்கள் வாக்களித்தால், நாடாளுமன்றத்திற்குச் சென்று அப்பாவை நினைத்து அழுது கொண்டு இருப்பாரே தவிர, மக்கள் பிரச்னையை பேச மாட்டார்.
துரை வைகோவை திமுக கட்சியினரே திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தோற்கடித்து விடுவார்கள். விஜயபாஸ்கருக்கு ஜல்லிக்கட்டும் தெரியும், மல்லுக்கட்டும் தெரியும். ஈடிக்கும் பயப்பட மாட்டார், உதயநிதி டாடிக்கும் பயப்பட மாட்டார். நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால், 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுக்கும் செல்கிறது. ஆனால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே தருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.
மாநில அரசுக்கு வரும் 50 சதவீதத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதை நீங்கள் நிறைவேற்றினீர்கள்? தேர்தல் நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் தருவோம் என்று கூறிவிட்டு, தற்போது தகுதியுடைய பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். இது அவர்கள் அப்பன் வீட்டு காசா? அடுத்தவன் பொண்டாட்டியை தகுதி உள்ளவர், தகுதி இல்லாதவர் என்று பிரிப்பதற்கு ஸ்டாலின் யார்?