வேலூர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை, வேலூர் மாநகருக்கு உட்பட்ட சார்பனாமேடு பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஊழலை ஒழிப்போம் என கூறி ஆட்சிக்கு வந்தது பாஜக. ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிகழ்த்திய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசினோம். இதற்கு பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
மாறாக, டெல்லியில் வழக்கின் தீர்ப்பை கொடுத்துவிட்டு, அன்று மாலையே கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தவர் பிரதமர் மோடி. ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் செய்த திமுகவை வெளியில்விட்டது பாரதிய ஜனதா கட்சி. தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தபோது, தவறாக செல்போன் இணைப்புகளைப் பயன்படுத்தி இருந்த குற்றச்சாட்டு மீது பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது?
உதயநிதியின் மீதான நான்கு கோடி அந்நியச் செலாவணி வழக்கு மீது பாஜக என நடவடிக்கை எடுத்தது? ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது உள்ள புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் செய்த திமுகவை பாதுகாப்பதே பாஜக தான். யாரைப் பார்த்து கள்ளக் கூட்டணி என்ன பேசுகிறார்கள்? ஊழல் செய்தவர்களை காப்பாற்றிய அவர்களுடன் தான் திமுக கள்ளக் கூட்டணி தொடர்கிறது. எங்களைப் பார்த்து தவறாக பேசி வருகிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: தருமபுரியில் விட்டதை பிடிக்க முயலும் பாமக.. தக்கவைக்குமா திமுக? - ரேஸில் முந்துவது யார்? - Lok Sabha Election 2024