சென்னை: செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பங்கள் விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்தகட்டமாக இருந்தாலும் அதனால் தனிமனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களையே நாம் சமீப காலமாக அதிகமாகப் பார்த்து வருகிறோம். இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாதகமாகப் பார்க்கப்பட்டாலும், மறைந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் குரல் மாதிரியை வைத்து அவர்கள் பேசுவது, பாடுவது போல அவ்வப்போது வெளியாகும் காணொலி ரசிகர்களை லயிக்கச் செய்யும். இது ஒருபுறமிருக்க தற்போது இந்த செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ அரசியலிலும் தடம் பதித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா அதிமுக தொண்டர்களிடம் பேசுவது போன்ற ஏஐ ஒலிப்பதிவு ஒன்றினை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், "நான் ஜெ.ஜெயலலிதா பேசுகிறேன்.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் மக்கள் ஆட்சி மலர வேண்டும்.. கழக தொண்டர்கள் அனைவரும் என் வழி நின்று தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்த பாடுபட வேண்டும்" என்று பேசுவது போல் அமைந்துள்ளது.
தமிழக அரசியல் ஆளுமையில் தனக்கென அசைக்க முடியாத இடத்தை உருவாக்கிக்கொண்ட ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு மறைந்த நிலையில், இன்று அதிமுக அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அவரது குரல்பதிவு அக்கட்சித் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் களத்தில் ஏ.ஐ:புதியதொழில்நுட்பத்தை அள்ளியெடுத்துக் கொள்வதில் தேர்தல் பிரச்சாரங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கும். அந்த காலத்தில் சுவர் ஓவியங்களில் இருந்து நாளிதழ்கள், வானொலி விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், பேனர்கள், சமூக வலைத்தள பிரச்சாரங்கள் என தொழில்நுட்பத்திற்கு தக்கவாறு பிரச்சாரங்களும் பல பரிமாணம் எடுத்துள்ளது. அந்த வகையில் தற்போதைய புதிய வரவாக நுழைந்துள்ளது ஏஐ தொழில்நுட்பம்.