புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஒரே பள்ளியில் படித்த 5 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். தேர்வாகிய மாணவர்களுக்கு பாராட்டு விழா, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப், இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "7.5% இட ஒதுக்கீட்டிற்கு மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பு படிப்பதற்கு அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2018 - 19ம் ஆண்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 9 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இந்த நிலை மாற வேண்டும் அதுமட்டுமின்றி கிராமப்புற மாணவர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
ஏழு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.700 கோடி மதிப்பில் காவேரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கியது. அதிமுக காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதாலேயே தற்போது திமுக அரசு இந்த திட்டத்தை முடக்கியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் காவேரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவாக பணிகள் நடைபெற்று திட்டம் நிறைவேற்றப்படும்.