"திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி! திருச்சி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அக்கட்சி பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மாயத் தோற்றத்தில் உள்ளன. இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்கிறார்கள். இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. ஒவ்வொரு கட்சியாக இந்தியக் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என சிலர் முயற்சி செய்தனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். 3 ஆண்டு திமுக ஆட்சியில், மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
3 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட அமையவில்லை. அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. 30 ஆண்டுக் காலம் ஆட்சியிலிருந்த கட்சி அதிமுக. 14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையிலிருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமில்லை. மக்களின் நலனே முக்கியம் என்பதாலேயே பாஜக கூட்டணியிலிருந்து விலகினோம்.
மரத்திற்கு மரம் தாவுவது போல் பாஜக, காங்கிரஸ் என்று கூட்டணி அமைத்து மத்தியில் பதவி வகித்தது திமுக. தமிழகத்தில் செல்வாக்கு இழந்த ஸ்டாலின் இந்தியா கூட்டணி என்ற போர்வையில் தேர்தலைச் சந்திக்கிறார். அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பலன்பெறக் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தி, மாநிலத்தைச் சீரழித்துவிட்டது" எனப் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், சீனிவாசன், பரஞ்ஜோதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர், கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், திருச்சி மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், திருச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், இப்ராம்ஷா, மாணவர் மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் வட்டக் கழக செயலாளர் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:குழந்தைகளை வெளியே விடாதீர்கள்: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு! - Mayiladuthurai Leopard Photo