நடிகை காயத்ரி ரகுராம் தேர்தல் பிரசாரம் தேனி:தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக மகளிரணி துணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அதன் படி நேற்று (வெள்ளிக்கிழமை) தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்துத் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "திமுகவும் பாஜகவும் வாரிசு அரசியல் செய்கின்றன. ஜெயலலிதாவுக்குப் பின்னால் நிறையச் சதி நடைபெற்றது. அதற்குக் காரணம் பாஜக தான். ஆனால், அவர்களோடு இன்று டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளார்.
ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இங்கு பாதி பேருக்குக் கிடைப்பதில்லை. திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு அனைத்தையும் ஏற்றிவிட்டு அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்வது? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களை வஞ்சிக்கின்ற அரசியல் செய்கிறது திமுக, மேலும் திமுக ஆட்சியில் டாஸ்மாக்கை தாண்டி செல்கிறது போதைப் பொருள் கலாச்சாரம், இதன் மூலம் பெண்கள் மிகவும் பாதிப்படைகின்றன.
11 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. அதே போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் அதிமுகதான். எனவே தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க அதிமுகவின் தேனி வேட்பாளர் நாராயணசாமியை வெற்றி பெற வையுங்கள்" என்றார்.
இதையும் படிங்க:ஆண் நண்பர்களை கட்டிப்போட்டு கத்தி முனையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 3 வாலிபர்கள் போக்சோவில் கைது!