மதுரை:மதுரை பழங்காநத்தத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, ‘‘மக்களை ஏமாற்றவே மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துகிறது. திமுக சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனை பார்க்காத திமுக, குடும்ப நலனை மட்டுமே பார்க்கிறது. திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தார்களா? கச்சத்தீவு, காவிரியை மீட்டெடுத்திருக்கலாம்.
பட்ஜெட் முழுமையாக வெளியாகவில்லை: மக்கள் பிரச்சினையை விட்டுவிட்டு செங்கோலைப் பற்றி பேசுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச விமான நிலையம் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி பேசவில்லை. மத்திய பட்ஜெட் தாக்கல் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பட்ஜெட் அறிக்கை முழுமையாக வந்த பிறகு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன் குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை. உள்ளாட்சித் துறை சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டது. உணவுப் பொருட்கள் கூட்டுறவுத் துறையில் வாங்கப்பட்டது. அம்மா உணவகத்தை தேர்தல் நெருங்குவதால் ஆய்வு நடத்துகிறார் முதலமைச்சர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் கொண்டு வந்ததை முற்றிலுமாக திமுக ஆட்சிக்கு வந்து முடங்கியுள்ளது.