தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம்: ஓபிஎஸ், சசிகலா தலைமையை கேட்கிறார்களா? - கே.சி.வீரமணி பரபரப்பு பேச்சு! - KC Veeramani about ops and sasikala - KC VEERAMANI ABOUT OPS AND SASIKALA

EX Minister K.C.Veeramani: அதிமுகவில் இருந்து நாங்கள் யாரையும் போக சொல்லவில்லை. அவர்களாகவே தான் வெளியே போனார்கள் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

கே.சி.வீரமணி புகைப்படம்
கே.சி.வீரமணி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 7:35 PM IST

வேலூர்:வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊசூர் பகுதியில் அதிமுக நிர்வாகி புத்தூர் ஜெகதீசன் என்பவரது ஜே.கே இணையதள சேனல் அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கே.சி.வீரமணி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தோல்வியுற காரணம் என்னவென்றால், ஏ.சி.சண்முகம் அவர்கள் அதிமுகவை துரோகி என்று சொன்னதாலும், எங்களுடைய வெறுப்பை அதிகமாக சம்பாதித்ததாலும் தான் தோல்வியுற்றார். இல்லையென்றால் அவருக்கு இன்னும் கூடுதலான வாக்குகள் கிடைக்க வாய்ப்புகள் இருந்தது.

ஏ.சி.சண்முகத்தின் செயல்பாடு, போக்கு, தான் தோன்றித்தனமான பேச்சுகள் தான் அவர் தோல்வியடைய காரணமாக அமைந்தது. அவருக்கு வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அனுதாபம் இருந்தது இதையே தான் பத்திரிக்கைகளும் தெரிவித்து இருந்தன.

அதிமுகவோடு அவர்கள் இருந்திருந்தால் 100% நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். இந்தத் தேர்தலை பொருத்தவரைக்கும், தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸ் அல்லது பாஜகவா என பார்ப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரைக்கும் மக்கள் பாஜகவை பெரும்பான்மையாக விரும்பவில்லை.

பிரதமர் மோடி வருகை மற்றும் அண்ணாமலையின் யாத்திரை, ராமர் கோயில் கட்டியது இதெல்லாம் மதவாதத்தை கொஞ்சம் பலப்படுத்தி மத உணர்வை அதிகப்படுத்தியதால், இந்த முறை கூடுதலாக பாஜகவிற்கு தமிழகத்தில் வாக்குகள் கிடைத்துள்ளது என்பதுதான் என்னுடைய கருத்து.

இதே போல கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தி நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டோம். இதை மக்கள் உணர்ந்து வாக்களித்ததால் தான் 38 சீட்டுகளை பெற்று வெற்றி பெற்றோம். இந்த முறை நாங்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை என மக்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் அதிமுகவை மக்கள் வெறுக்கவில்லை, திமுகவை மக்கள் வெறுத்து இருந்தாலும் அந்த வாக்குகளை மத்தியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரசுக்கு அளித்து விட்டார்கள். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் தான் அதிகமாக இந்த முறை பாஜகவிற்கு சென்றது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்தது. இந்த சூழலில் அப்போது மத்திய அரசான பாஜகவை எங்களால் எதிர்க்க முடியவில்லை. மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகவும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் அவர்களோடு அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவானது. பாஜகவும், அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்தார்கள். அதனால் தான் 11 மருத்துவ கல்லூரிகளையும், ஒன்பது புதிய மாவட்டங்களையும் உருவாக்க முடிந்தது.

விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறித்து கேட்டதற்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் சரி அவர்கள் காலக்கட்டத்தில் இடைத் தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள். அண்மையில் ஈரோடு இடைத்தேர்தல் எப்படி நடந்தது என மக்களுக்கு நன்றாக தெரியும்.

அரசியலில் சுதந்திரத்திற்கு பிறகு எந்த கட்சியும் செய்யாத செயலை ஈரோடு இடைத்தேர்தலில் திமுக செய்தது. இன்றைக்கு பல ஊடகங்கள் பாதி திமுக பக்கமும், பாதி பாஜக பக்கமும் உள்ளது. நடுநிலையாக மக்களின் மனநிலையை யாரும் சொல்வது இல்லை.

அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என எந்த தொண்டன் கூறுகிறான்? எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என கூறுகிறீர்கள்? ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் முன் வைத்தோம். அப்போதுதான் ஜெயலலிதா இருந்தது போல் செயல்பட முடியும் எனக் கூறினோம்.

ஆனால், ஓபிஎஸ் உட்பட ஒரு சிலர் அவர்களாகவே தான் வெளியே போனார்கள் நாங்கள் யாரையும் போக சொல்லவில்லை. வெளியே இருப்பவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள சொல்கிறீர்கள். வெளியில் இருப்பவர்கள் தான் திமுகவிற்கு சாதகமாகவும், பாஜகவுக்கு சாதகமாகவும் என அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். வேறு வேறு கூட்டணியில் நின்று தோல்வியுற்ற பிறகு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

இப்போது அவர்கள் தான் சொல்ல வேண்டும் நாங்கள் ஆதரவு தருகிறோம். எப்போது தேவைப்பட்டாலும் உங்கள் அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவிற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று சசிகலா, ஓபிஎஸ் உட்பட பிரிந்து போன அனைவரும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதை சொல்ல வேண்டும்.

இப்போது கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என அறிக்கை விடுபவர்கள். எடப்பாடியார் தலைமையில் நாங்கள் ஒருங்கிணைய தயாராக இருக்கிறோம் என அறிக்கை விட வேண்டும். எடப்பாடியார் தலைமையில் நாங்கள் அனைவரும் செயல்பட தயாராக உள்ளோம், நாங்கள் வருகிறோம் என அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர வேண்டும் என கூறுகிறார்கள் அப்படி என்றால் அவர்களிடம் தலைமையை கொடுக்க சொல்கிறார்களா என எங்களுக்கு புரியவில்லை?.

மக்கள் மாநில அரசு குறித்து யோசிக்காமல் மத்தியில் யார் வரவேண்டும் என யோசித்ததால் இந்த முடிவு வந்துள்ளது. ஆனால் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை பொறுத்திருந்து பாருங்கள் இதே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபடியான சட்டமன்றத் தொகுதியை வென்றெடுத்து மீண்டும் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டோம்.

துரைமுருகன் தனது மகனை ஜெயிக்க வைப்பதற்காக படாத பாடு பட்டு ராத்திரி பகலாக சுற்றித்திரிந்தார் அதை நானே பார்த்தேன். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது இது முதலமைச்சருக்கு தெரியும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் சாதி ஆணவ படுகொலைகள் அதிகம்; தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் - cpim secretary about Genocide Act

ABOUT THE AUTHOR

...view details