ஈரோடு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈரோடு தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு அருகே, வில்லரசம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று(புதன் கிழமை) நடைபெற்றது.
இந்த அறிமுக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் நாமக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர்,கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது, “2016ஆம் ஆண்டு 234 சட்டமன்றத் தொகுதியிலும், இரட்டை இலை சின்னம், வெற்றி பெற்ற வரலாற்று நிகழ்வு தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் சவால் விட்டு வெற்றி பெற்றார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் வழியில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ரூ.10க்கு உணவு மற்றும் மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் அதிக சொத்துக்கள் உள்ள வேட்பாளராக அசோக்குமார் நமக்கு கிடைத்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் மீது யாரும் குற்றம் சொல்ல முடியாது. அதிமுக எப்போதும் மக்கள் பணியாற்றும் இயக்கமாக இருந்து வருகிறது. இரட்டை இலை சின்னத்தை தமிழகத்தில் எவராலும் வீழ்த்த முடியாது. அதிமுக தொண்டர்களிடம் ஆற்றல் இருந்தால் அசோக்குமார் வெற்றி பெறுவார்” என்றார்.
இதனையடுத்து, ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசியதாவது, “ அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்கி கஜானாவை திமுகா நிரப்பி வருகிறது. தற்போதைய ஆட்சியில் மின்சாரம், வீட்டுவரி, சொத்துவரி, பெட்ரோல் விலை ஆகியவை அதிகரித்துள்ளது. ஆட்சியை சினிமா போன்று நடத்தி வருகின்றனர். மீண்டும் வாக்குறுதி என்று கூறி ஒரு டிரெய்லர் விட்டுள்ளனர். அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை திமுக முடக்கியதுடன், ஆன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்” என்று திமுக மீது குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:“பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை.. வாரண்டியும் இல்லை" - மு.க.ஸ்டாலின் தாக்கு! - MK Stalin Campaign