மதுரை: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராமப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது.
இதனால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த வாரம் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் கொளுத்தும் வெயிலில் கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, “பொதுமக்கள் தமிழ்நாடு அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்” என கண்டன முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இது குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, “கள்ளிக்குடி ஒன்றியம் சென்னம்பட்டி, ஆவல்சூரன்பட்டி கிராமத்தில் கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மக்கச் செய்யும் தொழிற்சாலையால், சுற்றுச்சூழல் மாசடைந்து மக்களுக்கு புற்றுநோய் மற்றும் கொடிய தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதனால் 30 கிராம மக்கள் இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே நான் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று இந்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தேன். தற்போது மக்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில், அரசின் கவனத்தை ஈர்க்க தேர்தலை புறக்கணித்தார்கள். நானும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன்.