சேலம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக அதிமுக நிர்வாகி சுரேஷ் என்ற சுரேஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கள்ளநத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மீது கடந்த காலங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், பல்வேறு வழக்குகளில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு அதிமுக விவசாய அணியின் ஆத்தூர் கிழக்கு மண்டல செயலாளராக இருந்த இவர், தற்போது அதிமுக உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையில் அமைந்துள்ள மணப்பாச்சி கிராமத்தில் சாராயம் தயாரித்து விற்றுவந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:"அறுபது ரூபாயால வாழ்க்கையே போயிடுச்சி.. டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும்" - கதறும் கள்ளக்குறிச்சி பெண்கள்! - kallakurichi illicit liquor issue