மதுரை:முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை ஒட்டி, மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்லூர் ராஜூ பேசியதாவது, பெருந்தலைவர் ஆட்சியை கொடுக்கும் ஆட்சி திமுக என்று கூறுவது குறித்து கேடகப்பட்ட கேள்விக்கு, “ சட்டஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க முடியும்?
சட்டம் ஒழுங்கு இவ்வளவு சீர்கெட்டு இருக்கும்பொழுது, சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுகவை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க முடியாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.