தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசியல் பழிவாங்கல்; நீதிமன்றத்தில் சந்திப்பேன்" - சிறையில் அடைக்கப்படும் முன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து - MR Vijayabhaskar Case - MR VIJAYABHASKAR CASE

MR VIJAYABHASKAR CASE: கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட புகைப்படம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 9:29 AM IST

கரூர்:கரூர் வாங்கல் அருகே உள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ், தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருந்த பகுதி அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, போலி சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு செய்யும் முயன்றதாக, மேலக்கரூர் சார் பதிவாளர் அளித்த புகார் அடிப்படையில், கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு ஜூன் 18ம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 நீதிமன்றத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூன்று முறை தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டதால், கடந்த 34 நாட்களுக்கு மேல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். இதனால் 13 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், தங்கி இருந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன் ஆகிய இருவரையும் கைது செய்து, கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு மதியம் 2 மணி அளவில் அழைத்து வந்தனர்.

கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆறு மணி நேரத்துக்கு மேலாக, சிபிசிஐடி போலீசார் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு 8 மணி அளவில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

இதனை அறிந்து அதிமுகவினர் அங்கு கூடி, திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்து, எம்ஆர் விஜயபாஸ்கர் அழைத்துச் சென்ற பொழுது, செய்தியாளர்களை பார்த்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், "தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ள வழக்கு நீதிமன்றம் மூலம் இதை சந்திப்பேன்" என்று கூறினார்.

இதன் பின்னர் மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல், கரூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்பு, ஆஜர்படுத்தினர். வரும் ஜூலை 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பின்னர் உரிய போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வர கூடுமென தெரிந்து, நேற்று மாலை முதல் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு கூடியிருந்ததால், நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:விடாமல் விரட்டிய சிபிசிஐடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதான கதையும், வழக்கு பின்னணியும்..!

ABOUT THE AUTHOR

...view details