கரூர்:கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரளா மாநிலம், திருச்சூரில் கைது செய்திருந்தனர்.
பின்னர் அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சொத்து ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கரை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களைக் கேட்ட நீதிபதி பரத்குமார் விஜயபாஸ்கரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காந்திகிராமம் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.