சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்அண்ணாதுரை பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயக்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாட திமுகவிற்கு தகுதி இல்லை. அண்ணாவைக் கொண்டாட தகுதி உடைய ஒரே இயக்கம் அதிமுக தான். திமுக அரைகுறையாக கொண்டு வந்த திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை கருணாநிதியின் பெயரை தான் சூட்டினார். அண்ணாவின் பெயரை எந்தத் திட்டத்திற்காவது சூட்டியுள்ளனரா?
அண்ணாவின் கொள்கைக்கு நேர்மாறாக செயல்பட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அனுதாபியாக திமுக செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் நீரில் பூத்த நெருப்பு போல உள்ளன. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்பது போல பேசி இருப்பது திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் வெளிநாடு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.
திமுக அரசு கார்ப்பரேட் அரசாங்கமாக செயல்படுகிறது. முதலமைச்சர் முதலீடு ஈர்க்கப் போனாரா? அல்லது அங்கே முதலீடு செய்யப் போனாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர் 7 ஆயிரத்து 568 கோடி முதலீடு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். தமிழ்நாட்டு அரசின் காலிப்பணியிடங்கள் 4 லட்சம் உள்ளது.
இதையும் படிங்க:'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்'.. புயலை கிளப்பும் திருமாவளவன்..! வீடியோ டெலிட் செய்ததால் பரபரப்பு!
விசிக மது ஒழிப்பு மாநாடு வரவேற்க வேண்டியது. மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து கட்சியின் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தால் அது தொடர்பாக அவர் முடிவு செய்வார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் நீரில் பூத்த நெருப்பு போல உள்ளன. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்பது போல பேசி இருப்பது திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதையே மறந்து விட்டார்கள். 2026ல் அதிமுக தனித்தன்மையுடன் ஆட்சி அமைக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 50வது பொன் விழா ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல், தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வரும் நிலை தான் திமுக ஆட்சியில் நிலவி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது காலி பெருங்காய டப்பா. மதுபான விற்பனையில் ரூ.56 ஆயிரம் கோடி வருவாயாக தமிழ்நாடு அரசு பெற்று வரும் நிலையில், அவற்றில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வை அளிக்காமல் அவர்களது வயிற்றில் அடித்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.