திருச்சி:நாடெங்கும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி முதல் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், 40 தொகுதியிலும் தாங்கள் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்பில் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுகவின் முதல் பிரசார பொதுக்கூட்டம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோயில் பகுதியில் நேற்று (மார்ச் 24) நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதனைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது மேடையில் பேசிய எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநில தலைவரும், திண்டுக்கல் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளருமான நெல்லை முபாரக் பேசுகையில், "மோடியா? அல்லது லேடியா? என்றார், ஜெயலலிதா. ஆனால், தற்போது மோடியா? அல்லது எடப்பாடியா? என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் அதிமுக தான் மாபெரும் எதிர்க்கட்சியாக இருக்கும்.
சமூக நீதி இருக்கிறது எனக் கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்கள் வேட்பாளர்களில் ஒரு சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் இருந்தால் கூறுங்கள்? பார்ப்போம் எனக் கேள்வியெழுப்பினார். மேலும், திமுகவை வர உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் அகற்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு அச்சாரமாக இருக்கும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை அத்தனையும் உண்மை.
அதிமுக எத்தகைய தடையையும் தாங்கி நிற்கும் மாபெரும் இயக்கமாக உள்ளது. தமிழ்நாடு கோட்டை அல்ல டெல்லி கோட்டையில் கூட அதிமுகவை அசைக்க ஆள் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். பாஜகவுக்கு அடிமை நாங்கள் இல்லை என்பதை நாம் எடுத்துக் காட்டுவோம். ஆகவே, வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெற்றி அறிவிப்பு நாளில் திமுகவிற்கும் - டெல்லி அரசுக்கும் முடிவு கட்டும் தேர்தலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை குறிப்பிட்ட சிறுவாணி தடுப்பணை விவகாரம்.. அன்றே சட்டப்பேரவையில் எதிரொலித்த ஈடிவி பாரத் செய்தி! - Coimbatore Water Issue